எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் அல்லவா? சொர்க்கத்தின் அதிபதியாக விளங்கும் தேவலோக தலைவன் இந்திரனுக்கு அப்படி ஒரு பாக்கியமற்ற நிலை ஒரு சமயம் உண்டானது.
கேட்டதை தரும் காமதேனு, கற்பக விருட்சம், அரம்பையர்கள் என அனேக சுகங்களை பெற்ற இந்திரனுக்கு திடீரென ஒரு இனம் புரியாது அச்சம் தொற்றிக் கொண்டது. அனைத்து சுகங்களும் அவனைத் தீயாய் சுட்டது. மனம் வாடினான். உடல் மெலிந்தான்.
அதனை கண்டு இந்திரனின் மனைவி இந்திராணி மிகவும் வருந்தினாள். ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடுமையான போர் நடந்தது. அசுர படைத்தலைவனான விருத்திராசுரனை அழிக்க முடியாமல் இந்திரன் திணறினான் .அவனை அழிக்கும் வழியைக் கேட்டு சிவபெருமானை வணங்கி நின்றான்.
விருத்திராசுரனை அழிக்கும் ஆயுதம்� ததீசி முனிவர் தான் என்று உரைத்தார் சிவபெருமான். சிவபெருமானின் உத்தரவின்படி ததீசி முனிவர் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது வஜ்ஜிர தேகத்தில் இருந்து முதுகெலும்பு எடுத்து அதில் ஆயுதம் செய்யப்பட்டது.
அதுவே இந்திரன் கையில் இருக்கும் வஜ்ராயுதம் அந்த ஆயுதத்தால் தான் விருத்திராசுனை அழிக்க முடிந்தது. போரில் தேவர்கள் பெரும் வெற்றியை பெற்று விட்டனர் .ஆனால் அதன் பின்னர்தான் இந்திரன் மனம் வருத்தத்தில் தோய்ந்து போனது.ததீசி முனிவரின் இறப்பு பிரம்மஹத்தி தோஷமாக மாறி இந்திரனை வாட்டியது.
TO KNOW MORE ABOUT – POCKET FM PROMO CODE 2024
மிகுந்த கலக்கமுற்ற இந்திரன் நாரதரின் உதவியை நாடினான். நாரத மகரிஷியோ பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட� சிவபூஜை செய்வதே சிறந்த வழி என்று கூறினார். அதன்படி இந்திராணியுடன் பூவுலகம் வந்த தேவேந்திரன் கங்கையில் நீராடி முதலில் விஸ்வேஸ்வரனை வணங்கினான்.
அப்படியே பல சிவ ஆலயங்களை வழிபட்ட படியே பாலாற்றங்கரைக்கு வந்து சேர்ந்தான். காஞ்சியில் புதனுடன் சேர்ந்து சிவபூஜை செய்தான். அங்கிருந்து தெற்கு நோக்கி வந்த தேவர்கோன் பெரிய மரதங்காட்டை அடைந்தான் .அங்கு தானாக பூமியில் இருந்து தோன்றிய பெருமானை கண்டான்.
தீர்த்தம் அமைத்து அந்த லிங்கத்திற்கு நாள்தோறும் நியமத்துடன் பூஜை செய்தான். இந்திராணி வாசனை மலர்களை பறித்து மாலை ஆக்கி மருதவன ஈசனுக்கு சாற்றி மகிழ்ந்தாள். இவ்வாறு வழிபட்டு வரும் வேளையில் பார்வதி தேவியோடு சிவபெருமான் அங்கு தோன்றினார்.
அவரிடம் இந்திரன் தனக்கு ஏற்பட்டுள்ள பிரம்ம தோஷத்தையும் தேவையற்ற பயத்தையும் போகும் படி வேண்டினான். அப்படியே அருளி செய்தார் சிவபெருமான் பார்வதி தேவி விபூதி பிரசாதமும் தீர்த்த பிரசாதமும் வழங்கி இந்திரனை ஆசிர்வதித்தார்.
அப்போது இந்திரன் இத்தளத்திற்கு வரும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அருள வேண்டும். என்று வேண்டினான். அன்னையும் அப்படியே அருளச் செய்தார். இத்தல இறைவன் புரந்தரீசர் என்றும் இந்திரனுக்கு பிரசாதம் அளித்ததால் அம்பிகை இந்திர பிரசாத வல்லி என்றும் பெயர் பெற்றனர்.
இந்திரன் அமைத்த தீர்த்தம் இந்திர தீர்த்தம் என்றும் இந்த இடம் ‘புரந்தபுரி’ என்று போற்றப்பட்டது. அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயத்தில் தினமும் ஒருகால பூஜை மட்டுமே நடக்கிறது.
தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மருதாடு.
இந்த ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.